Wednesday, October 6, 2010

அம்மனுக்குப் பூப்புனித நீராட்டு

கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூருகிறது.

"Chakkulathukavu Sree Bhagavathy Amman"
Kerala, India

இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது.

அதன் பிறகு ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது.

முக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.

பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.

பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது

இங்கிருந்து